Saturday, April 5, 2014

கனவு

பிரபஞ்சத்தின் முதல் மனிதனை சந்தித்தேன்.
நிர்வாணம் புனிதமென்றானவன்.
தேடல் சுகமானதென்று சொல்லித் திளைத்திட்டான்.
சாதி,மதம் பற்றியெல்லாம் அவன் அறிந்திருக்க ஞாயமில்லை... 
அதற்கான கேள்விகளுக்கு மட்டும் என்னை -
ஆயிரம் வினாக்களுடன் வெறித்துப்பார்த்தான்.
சில மேகத்திரள்களினூடே புகுந்து 
சற்று நேரத்தில் மறைந்தும் போனான்.

இன்றும் சில வினாக்களை தொகுத்துக்கொண்டு-
உறங்கச் செல்கிறேன்.
உலகின் கடைசி மனிதனிடம் வினவவேண்டுமென்று.

@ பிரபாகரன் நந்தன்.

@@@@@@@

ஊழலை ஒழிப்பதெல்லாம்-
இத்தேசத்தில்
இறந்த குழந்தையை பிறசவிக்க 
யோனிவாயிலில் காத்துக்கிடக்கும் 
மருத்துவச்சியின் செயலாய் - பயனற்றுப் போகும்.

@ பிரபாகரன் நந்தன். 

விக்ரஹம் விற்பனைக்கு

கதவருகே நின்று பார்க்கலாம்
காலடி வரை சென்றும் பார்க்கலாம்
பணமிருந்தால் பாலாபிஷேகம் செய்யலாம்-
பட்டு வஸ்த்திரமும் சாத்தலாம்.
பன்னீர் தெளித்த அங்கம் தொட்டு-நம்
கண்ணீர்க் கதைகள் சொல்லலாம்.

நான் 
கையிலிருந்ததையெல்லாம் தந்து 
கருவறை வாசல் வரை சென்று-
கடுங்கோபத்துடன் விக்ரஹத்தைப் பார்த்தேன்.
அபிஷேகம் முடித்த அத்தேகத்தில் -

விழிகளின் கீழ் மட்டும் சில நீர்த்திவளைகள் ஒட்டியிருந்தது.

@ பிரபாகரன் நந்தன்.